இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Monday, May 31, 2010

குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-38

என்னாட இது இவ்வளவு நாளா எலக்ட்ரான், புரோட்டான் ன்னு பார்த்துட்டு இப்போ என்ன அந்த ஆன் இந்த ஆன் ன்னு சொல்றானே, அது மட்டும் இல்லாம நாலே நாலு விசை தான் இருக்கா? மத்தெத்ல்லாம் எங்க ன்னு கேக்கலாம். வெப்பம், ஒளி, உராய்வு போன்ற அனைத்து விசைகளும் மின்காந்த விளைவு என முன்னாடியே பார்த்திருக்கோம். மத்த விசைகளை பத்தியும் முன்னாடி பார்த்திருக்கோம். சரி விசயத்திற்கு வருவோம்.

எப்படி மின்காந்த விசையை கொண்டு மேலே சொன்ன விசைகளை புரிஞ்சுக்கறமோ அதே மாதிரி இந்த அணுவுக்குள்ள என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்க முயற்சி பண்றாங்க. இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு பார்க்கலாம். மின்சாரம் எலக்ட்ரான்களால் கடத்தப்படுதுன்னு கண்டுபிடிச்சப்புறம் எப்படி எலக்ட்ரான்களால் கடத்தப்படுதுன்னும் கண்டுபிடிச்சாங்க. ஒரு மூலக்கூறில் ஒரு எலக்ட்ரான் னுக்கான இடம் காலியா இருக்கும் போது ஒரு பக்கம் இருந்து தரப்படும் எலக்ட்ரான் அப்படியே போய் அடுத்த பக்கம் போகுது. எப்படி பல்லாங்குழி ஆடறப்போ ஒரு கல் எடுத்து ஒவ்வொரு குழியா போட்டுட்டே போறமோ அப்படி. இதனால என்ன பயன்?

இத கட்டுப்படுத்த முடியும். நமக்கு தேவையான அளவு மட்டும் மின்சாரத்தை கடத்த முடியும். அப்படி செஞ்சு தான் கணினியில் இருந்து அனைந்து மின்சார சாதங்களும் வந்திருக்கு. இதையே மத்ததுக்கும் யோசிச்சு பாருங்க. குறைவான எரிபொருளில் பயணம் செய்யலாம். தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செஞ்சுக்கலாம். கடல் நீரில் இருந்து மிக குறைவான செலவில் நல்ல நீர் வடிகட்டிகலாம்.

ஆனா இதுல இருக்கற சிக்கலே இத புரிஞ்சுக்கறதுதான். போன பதிவில் குளுயான் ன்னு ஒரு துகள் பார்த்தோம். அந்த துகளுக்கு அர்த்தம் ஒட்டும் துகள். ஆங்கிலத்தில் பசை என்ற வார்த்தையும் ஆன் என்ற வார்த்தையும் சேர்த்து உருவாக்கப்பட்டது. இது என்ன பண்ணும்? புரோட்டான் மற்றும் நீயூட்ரானில் உள்ள குவார்க்குகளை பிணைத்து வைத்திருக்கும். இத தூது துகள் எனவும் சொல்லுவாங்க.

இன்னொரு விதமா சொல்லும்னா ஒரு விசைக்கு துகள் என்ற அடையாளம் குடுத்திருக்காங்க. இத புரிஞ்சுக்க அலை-துகள் இருமை பற்றி முன்னாடியே சொன்னத நினைவுக்கு கொண்டுவாங்க.

Friday, May 28, 2010

குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-37

துகள்களை இரண்டு வகையாக பிரிக்கறாங்க  என போன பதிவில் பார்த்தோம். இப்போ அந்த துகள்கள் என்ன என்ன என பார்க்கலாம். முதல்ல விசை துகள்கள். இதில் நான்கு இருக்கின்றன.

விசை                 துகள்

வலு                    குளுயான்
குறை                 கு-போசான்,பூஜ்ய-போசான்
மின்காந்தம்     போட்டான்
புவியீர்ப்பு        கிராவிட்டான்

இதுல கிராவிட்டான் என்பது கற்பனை துகள் தான். புவியீர்ப்பு விசை இன்னும் இதில் இணைக்கபடவில்லை என முன்பே பார்த்திருக்கோம். அது இதனால் இருக்கலாம்ன்னு ஒரு ஊகம் தான். இந்த கு-போசான் என்பது குறை விசை போசான் என விரியும். இவைகளை பொதுவாக போசான்கள் எனவும் சொல்லுவாங்க. அதுனால இந்த இரண்டையும் குழப்பிக்க கூடாது. கணக்கு எடுத்துக்கும் போது கிராவிட்டான் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. அந்த இடத்த பூஜ்ய-போசான் எடுத்துக்கும்.

அடுத்து எடை துகள்கள்

இதுல இரண்டு வகைகள் உண்டு. குவார்க் மற்றும் லெப்டான்.

குவார்க்குகள் ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.

 1. மேல்
 2. கீழ்
 3. அடி
 4. தலை
 5. இழுப்பு
 6. தெரியாதது 

(up,down,top,bottom,charm,strange).

 இவகளுக்கு எதிர்துகள்கள் உண்டு. இவைகளில் மேல்,கீழ்  துகள்கள் நிலையானவை. இந்த நிலையான துகள்கள் முதல் வம்ச துகள் என அழைக்கப்படுகின்றன. மற்ற இரண்டாம் வம்ச, மூன்றாம் வம்ச துகள்கள் நிலையற்றவை. மைக்ரோ நொடிப்பொழுதில் முதல் வம்ச துகள் ஆகின்றன.

லெப்டான்களும் ஆறு உண்டு. அவை

 1. எலக்ட்ரான்
 2. எலக்ட்ரான் நீயுட்ரினோ
 3. ம்யூயான்
 4. ம்யூயான் நீயுட்ரினோ
 5. ட்யூயான்
 6. ட்யூயான் நீயுட்ரினோ

குவார்க்குகளும் லெப்டான்களும் சேர்த்து பெர்மியான்கள் என அழைக்கப்படுகின்றன


இப்போ

விசை துகள்கள் 4
பெர்மியான்கள் 12

ஆக மொத்தம் 16 துகள்கள். இதுல எடைக்கு காரணமாக சொல்லப்படுகின்ற ஹிக்ஸ்-போசான் சேர்த்துனா 17 துகள்கள். இத வச்சு தான் மொத்த அடிப்படை அமைப்பே விளக்கப்படுது.

இந்த ஒவ்வொரு குடும்ப துகள்களையும் தனித்தனியா பார்க்கலாம். அத்தோட கூடவே இந்த துகளின் இடையில் செயல்படும் துகள் எல்லாம் சேர்த்தா ஒரு இருநூறு வரும். அவைகளையும் அவைகளை கண்டுபிடிக்க துணை செய்த குவாண்டம் கொள்கைகளையும் பார்க்கலாம்.

இதுல ஜன்ஸ்டீனின் சார்பியல் விதியும் சேர்க்கபடலை அப்படீன்றதையும் நினைவில் வச்சுக்கோங்க.

ராஜசங்கர்.

Tuesday, May 18, 2010

குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-36

இவ்வளவு நாளா குவாண்டம் தியரி ன்னு எழுதிட்டு என்ன புதுசா அடிப்படை அமைப்பு ன்னு ஒன்னு உள்ள வருதே ன்னு யோசிக்கறவங்களுக்கு இந்த விளக்கம்.

குவாண்டம் கொள்கை என்பது நீரூபிக்கப்பட்டது. ஆனா தனிப்பட்ட விளைவுகளை மட்டும் விளக்ககூடியது. இங்க தனிப்பட்ட நிகழ்வு ங்கிறது ஒரு துகள் இன்னொரு துகளோட மோதினா என்னாகும் அப்படீங்கற மாதிரி. இது பல பிரிவுகள் உள்ளது. குவாண்டம் இயங்கியல், குவாண்டம் நிற இயங்கியல் என்பன. ஆனா இந்தெல்லாம் பண்றதுக்கு என்ன காரணம், உலகில் இருக்கும் விசைகள் எப்படி இயங்குகின்றன? எடை எப்படி வருகிறது? இந்த மாதிரி கேள்விகளுக்கு இந்த மாதிரியான தனிப்பட்ட கொள்கைகளால் பயனில்லை அப்படீன்றதால இதையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரு படம் போட முயற்சி பண்ணினது தான் இந்த அடிப்படை அமைப்பு.

இங்கு இன்னொரு தகவலையும் பார்க்கனும். இந்த அடிப்படை அமைப்பு மட்டும் தான் இந்த ஒருங்கிணைப்ப செய்ய முயற்சிக்கல. மற்றயவையான ஸ்டிரிங் கொள்கை, அதி புவியீர்ப்பு விசை கொள்கை என பலவும் உணடு. ஆனா இதுகள்ள எதுவும் முழுசா இல்ல அப்படீன்றது தான் உண்மை.

சரி, இப்போ இந்த அடிப்படை அமைப்ப கொஞ்சம் விவரமா பார்க்கலாம். இதுல பொருளும் விசையும் தான் உலகின் அடிப்படை அலகாக பார்க்கப்படுகிறது. துகள்கள் முதல் நிலை துகள்கள் எனவும், விசை ஏற்பான் எனவும் இரண்டாக பிரிக்கப்படுகிறது.

அடிப்படை விசைகள் நான்கு என முன் பதிவுகளிலியே பார்த்தோம். அதில் புவியீர்ப்பு விசை இந்த அமைப்பில் வராது. ஆனாலும் அதுக்கும் துகள்கள் இருக்குன்னு ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறாங்க. அதே மாதிரி தான் ஐன்ஸ்டைன்னின் சார்பியல் விதியும். அதுவும் இதில் வராது.

அடுத்த பதிவில் எது எது இதில் வரும்? குவாண்டம் தியரி எப்படி இதெயெல்லாம் புரிந்து கொள்ள உதவுதுன்னு பார்ப்போம்.

ராஜசங்கர்.

Saturday, May 15, 2010

உயிர்தளிப்பு கொள்கை -1

இந்த உயிர்தளிப்பு அல்லது பரிணாமக்கொள்கை அப்படீன்றாங்களே அப்படீன்னா என்ன என எனக்கு தெரிந்த வரையில் விளக்க முயல்கிறேன். பொதுவாவே இந்தக்கொள்கைக்கு மதவாதிகள் கிட்ட இருந்து நிறைய எதிர் வாதங்கள் வரும்.

டார்வின் கொள்கை தப்பு,
அதை நிறைய பேர் நம்பல,
இதுக்கு என்ன ஆதாரம்,
இத யாரும் கண்ணால பாத்துருக்காங்களா இப்படி, கூடவே எப்போதும் கேட்கப்படுவதான

குரங்கில் இருந்து மனுசன் வந்தான்னா ஏன் இன்னும் குரங்குகள் இருக்குது?


இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கலாம்னு நினைச்சிதான் இந்த பதிவு. இந்த கேள்விகள் எல்லாவற்றையும் பாத்துட்டு பின் ஆற அமர கொள்கையை விளக்கலாம்.

1. குரங்கில் இருந்து மனுசன் வந்தான்னா ஏன் இன்னும் குரங்குகள் இருக்குது?
     இந்த கேள்வி இன்னொரு விதமாவும் கேட்கப்படும், ஏன் எல்லா குரங்குகளும் மனுசன் ஆகல? முதல்ல இந்த கேள்வியே தப்பு. டார்வினோட கருத்துப்படி மனிதனுக்கும் குரங்குக்கும் மூதாதை ஒன்னுதான்னு சொன்னார். அதாவது மனிதர்கள், வாலிலா குரங்குகள் எனப்படும் சிம்பன்ஸி, கொரில்லா போன்றவைக்கும் மூதாதை ஒன்னுன்னு சொன்னார். இதுக்கு வேற ஒரு உதாரணம் பார்ப்போம்.

நாம வீட்டில் வளர்த்துர நாய்கள், பூனைகள் போன்றவற்றின் இனம் காட்டிலும் உண்டு. காட்டு நாய், காட்டுப்பூனை ன்னு பொதுவா அதிலும் சொன்னாலும் இனங்கள் உண்டு. மனிதன் இந்த காட்டு விலங்குகளை பிடிச்சுக்கிட்டு வந்து பயிற்சி கொடுத்து தனக்கு தேவையான மாதிரி மாத்திக்கிட்டான். இதனால என்னாச்சு, வீட்டுல வளர்ந்தவை தனி உயிரினமா மாறிடுச்சு. இது தானாவே நடந்தா அது தான் உயிர்தளிப்பு.

இந்த வீட்டு விலங்குள் உதாரணத்தை நம்ம பயிரிடும் பயிர்களுக்கும் சொல்லலாம். காட்டுக்கத்தரி, காட்டு நெல் இப்படி உதாரணங்கள் இருக்கு. இப்போ புரியும்ன்னு நினைக்கிறேன், குரங்கும் மனிதனும் எவ்வாறு ஒரே நேரத்தில் இருக்க முடியும்ன்னு.

சரி, இப்போ நிறைய விலங்கு இனமே அழிஞ்சுகிட்டு வருது. புலி,சிங்கம்,காண்டாமிருகம் போன்றவை ஒரு உதாரணம். மனிதன் நாளைக்கு இதே மாதிரி குரங்குகளையும் வேட்டையாடி கொன்னா இப்படி கேள்வியும் கேக்க முடியாது, இருக்கும் சூழ்நிலையில் தாக்கு பிடிக்க முடிபவை தான் உயிரோடு இருக்கும் என்ற டார்வினின் கொள்கையும் சரியா இருக்கும்.

2. உயிர்தளிப்பு இன்றும் நடக்கிறதா?

இந்த கேள்விக்கு பதில், ஆமாம் இன்றும் நீங்கள் இதை படிக்கும் போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு உதாரணம், பூச்சி வகைகள். உலகத்தில் இருக்கும் பூச்சி வகைகளை ஒரு பட்டியல் போடவே முடியாது, ஏன்னா, வருடத்திற்கு ஆயிரக்கணக்கில் பூச்சி வகைகள் அழிந்து மற்ற வகைகள் உண்டாகும். வாழ்நாள் குறைவா இருக்கும் உயிரினங்களில் இந்த தளிப்பை நல்லாவே பார்க்கலாம்.

இன்னொரு உதாரணம், நைலான் ஐ உணவாக கொள்ளும் பேக்டீரியா. இது பிலாபேக்டீரியம் என்ற பேக்டீரியாவின் ஒரு வகை. இது நைலான்- 6 தயாரிப்பில் வெளிவரும் துணை பொருட்களை ஜீரணிப்பதற்கான என்சைம்களை உருவாக்கியது. இந்த என்சைம்கள் வேறு பொருட்கள் மீது செயல்படவில்லை. நைலான் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டதாலும், இதன் வேதிவினை பொருட்கள் முன்பு இல்லாததாலும் இந்த பேக்டீரியா நைலான் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே உருவானது.

இது மட்டுமல்லாது, வயல்களில் பயிர்களை நாசமாக்கும் பூச்சிகள், அவைகளை கொல்வதற்காக தெளிக்கப்படும் மருந்துகளையே ஜீரணிக்கும் ஆற்றல் பெற்று விடுவதும் உயிர்தளிப்பு, நம் கண்ணெதிரே நடப்பதற்கு உதாரணமாகும்.

மற்ற கேள்விகளுக்கு பதில்கள் தொடரும்.

ராஜசங்கர்.

Friday, May 14, 2010

அறிவிப்பு-உயிர்தளிப்பு கொள்கை பற்றிய பதிவுகள்

நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு அல்லது மூன்று பதிவுகளில் உயிர்தளிப்பு கொள்கை(பரிணாம கொள்கை) பற்றி விளக்கலாம் என்றிருக்கிறேன்.

குவாண்டம் தியரி பற்றிய பதிவுகள் வழக்கம் போல் தொடரும்.

சந்தேகங்கள்/கேள்விகள் இருந்தால் விடையளிக்க முயல்கிறேன்.

ராஜசங்கர்.

குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-35

இந்த துகள்- எதிர் துகள், அடிப்படை துகள் என எல்லாம் சொல்லப்படுவை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கண்டுபிடிக்க பட்டன என பார்த்தோம். கூடவே இத கண்டுபிடிக்கறதே உலகம் எப்படி உருவாச்சு, எப்படி இயங்குது என தெரிஞ்சுக்கறதுக்குதான்.

இந்த மாதிரி துகள் எல்லாம் வந்தது எப்படி என சொல்றத அடிப்படை அமைப்பு (Standard model)  என இயற்பியல் அறிஞர்கள் சொல்றாங்க. இத ஏன் அமைப்பு தான் சொல்றாங்கன்னா இது இன்னும் முழுமை பெறவில்லை. இருக்கும் அடிப்படை விதிகள் நான்கும் இன்னமும் இணைக்கபடவில்லை. இந்த நான்கு விசைகள் பத்தி முன்னாடியே பார்த்திருக்கோம்.

துகள்-எதிர் துகள் மோதினா இரண்டும் அழிஞ்சு வெறும் சக்திதான் மிச்சம் இருக்கும் என பார்த்தோம். மேலும் இந்த எதிர் துகளை எப்படி ஊகிச்சாங்க? கண்டுபிடிக்கப்பட்ட எல்லா துகள்களுக்கும் எதிர் துகள் உண்டா?துகள்களுக்கு மின் - காந்த ஈர்ப்பு தவிர வேறு பண்புகள் உண்டா? என பார்ப்போம்.


ராஜசங்கர்

Thursday, May 13, 2010

அறிவிப்பு

நண்பர்களே,

மீண்டும் தொடர்கிறது.

ராஜசங்கர்.