இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Sunday, August 22, 2010

குவாண்டம் கொள்கையும் இருக்கும் துகள்களும்-41 ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கை

இந்த பதிவில் ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கைகளை பத்தியும் அதுக்கும் குவாண்டம் தியரிக்கும் என்ன சம்பந்தம் என பார்க்கலாம்.

ஐன்ஸ்டைன் பத்தியும் அவருடைய புகழ்பெற்ற சூத்திரம் ஆன E=mc2 பற்றியும்
அறிவியல் படிச்சவங்க எல்லோருமே படிச்சிருப்பாங்க. சும்மா ஒளியோட வேகம் தான் பெரிசு அதுக்கும் மேல வேகம் கிடையாது என்று சொல்வதற்கு பதிலாக இந்த கொள்கைகள் எவ்வாறு உருவாயின யார் யார் எல்லாம் அதில் பங்கெடுத்தாங்க என்பதை பற்றி எல்லாம் பார்க்கலாம். ஆனா அதுக்கும் முன்னாடி ஒரு சின்ன விளக்கம் தேவைப்படுது.

சார்பியல் கொள்கையையும் சார்பு தத்துவத்தையும் போட்டு குழப்பிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. அது என்னங்க சார்பு தத்துவம்? அழகு பார்பவர்களை பொறுத்தது. ஓருவருக்கு அழகாக தெரியும் ஒன்று இன்னொருவருக்கு அழகாக தெரியாது போன்றவை தான் சார்பு தத்துவம். இந்த சார்பு தத்துவம் எல்லாத்துக்கும் சொல்லலாம். ஆனா இது வேறு சார்பியல் கொள்கை வேறு. இந்த குழப்பத்தை ஒரு மதக்கருத்துக்கோ அல்லது அறிவியலை தாக்குவதற்கோ பயன் படுத்துபவர்கள் நிறைய பேர். அதுனால அடுத்த வாட்டி யாராச்சும் ஐன்ஸ்டைனை துணைக்கு இழுத்தா கீழே படிக்கப்போகும் கருத்துக்களுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் என யோசிங்க.

ரிலேட்டிவிட்டி என்பதை சார்பியல் சொல்வது ஏன் பொருந்தும் என்றால் அது இயற்பியல், வேதியியல் மாதிரி பரிசோதனை செய்து ஒப்பீடு செய்யக்கூடிய ஒரு கொள்கை. சரி இப்போ அது என்ன என பார்க்கலாம்.

முந்தைய பதிவுகளில் படிச்சிருக்கோம் நியூட்டன் தான் புவியீர்ப்பு விசை என ஒன்னு இருக்கு என கண்டுபிடிச்சவர், அவருடைய மூன்று விதிகள் தான் இயற்பியலை முன்னே கொண்டு சென்றன என எல்லாம் பார்த்தோம். ஆனா நியூட்டனின் விதிகள் பிரபஞ்சத்தில் நடக்கும் எல்லா விளைவுகளையும் விளக்க முடியலை. அதுக்கா என்ன பண்ணினாங்கனா ஒரு கற்பனை விசைகள் இருப்பதாக சொல்லி இந்த விளைவுகளை கணக்குக்கு கொண்டுவந்தாங்க. நம்மூர்ல வரவு செலவு கணக்கு ஓரு ஓரமா உதைச்சா இன்னொரு வரவை வச்சு அந்த ஓட்டைய அடைக்கற மாதிரின்னு வச்சுக்கோங்க.

எந்தெந்த விளைவுகளை விளக்க முடியலை அப்படீங்கறதுக்கு ஒரு எடுத்துக்காட்டு பார்க்கலாம். பூமியை சந்திரன் சுற்றும் போது அதன் சுழற்சி ஒரு நீள்வட்ட பாதையில் இருக்கும். இப்போ பூமியும் சந்திரனும் மட்டும் தான் கிட்ட கிட்ட இருக்கு வச்சுக்கோங்க. இந்த நீள்வட்ட பாதையானது மாறாம இருக்கும். ஒரு வாட்டி எப்படி சுத்துதோ அதே மாதிரி தான் சுத்தும். ஆனா பூமி சூரியனை சுத்துது கூடவே கிட்ட நிறைய கோள்களும் இருக்கு. இதெல்லாம் சேர்ந்து இந்த நீள்வட்ட பாதைய மாற்றும். எப்படி மாற்றும் என்பதை கீழே இருக்கும் படத்தை பாருங்க.சுற்றும் திசை மாறுது இல்லையா? இதே மாதிரி இன்னும் சில விளைவுகள் இருக்கு. இதை நியூட்டனின் விதிகளை கொண்டு கணக்கிட முடியல. புதன் கோளுடைய இந்த விளைவை ஐன்ஸ்டைனுடைய சார்பியல் கொள்கைகள் தான் விளக்கின. ஐன்ஸ்டைன் இரண்டு சார்பியல் கொள்கைகளை வெளியிட்டார். இரண்டும் சேர்ந்து இப்போது சார்பியல் கொள்கை என்றே அழைக்கப்படுகின்றன. ஒன்று சிறப்பு சார்பியல். இன்னொன்று பொது சார்பியல். முதலில் சிறப்பு சார்பியல் கொள்கையை பார்க்கலாம்.

ஐன்ஸ்டைன் 1905 இல் தன்னுடைய சிறப்பு சார்பியல் கொள்கையை விளக்கும் இரண்டு கட்டுரைகளை எழுதினார். அதில் சொல்லப்பட்ட கருத்துக்களை சுருக்கமாக கீழே இருக்கின்றன.

1. ஒளியின் மாறாவேகம் - ஒரு வெற்று ஊடகத்தில் ஒளியின் வேகம் அது வெளிப்பட்ட இடம் நிலையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே அளவாகத்தான் இருக்கும்.

2. சார்பு கருத்து - இரண்டு பொருட்கள் ஒரே வேகத்தில் இயங்கும் போது ஒன்றில் ஏற்படும் மாற்றத்திற்கான இயல்பியல் விதிகள் இன்னோரு பொருளிலும் அதே மாற்றத்தை கொண்டுவரும்.  அதாவது பார்ப்பவருடைய பார்வையை பொருத்து இயற்பியல் விதிகள் மாறு படாது.

இந்த இரண்டு கட்டுரையில் இன்னோரு கட்டுரையில் அந்த சமன்பாடு இருந்தது. இது மட்டும் இல்லாது அதே வருடம் இன்னும் இரண்டு கட்டுரைகளை எழுதினார். இந்த நான்கு கட்டுரைகளால் அந்த வரும் அதிசிய வருடம் என அழைக்கப்படுகிறது

இந்த சிறப்பு சார்பியல் கொள்கை இன்னும் சில கருத்துக்களை முன் வைத்தது.

1. ஒளியின் வேகத்தை விட எந்த பொருளும் போக முடியாது
2. அதிக வேகத்தில் சென்றால் நேரம் வழக்கத்தை விட மெதுவாக செல்லும்

இதுல புவியீர்ப்பு விசை பற்றி ஏதும் இல்லை. அதுக்கப்புறம் எட்டு வருடங்கள் புவியீர்ப்பு விசையை இதுக்குள்ள கொண்டு வர உழைச்சார். அதில் இருந்து வந்தது தான் பொது சார்பியல் கொள்கை. அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Saturday, August 21, 2010

அறிவிப்பு-பதிவுகளின் தொகுப்பு

இதுவரையில் இந்த வலைப்பூவில் வந்த குவாண்டம் கொள்கையும் இருக்கும் துகள்களும் எனும் தலைப்பில் வந்த பதிவுகள் கீழே காணும் சுட்டிகளில் தொகுக்கப்பட்டுள்ளன


தொடர்ச்சியாக படிக்க விரும்புபவர்களுக்கு உதவும். இதை நீங்கள் விரும்பும் வடிவத்தை தரவிறக்கியும் கொள்ளலாம்.

பதிவுகளை உடனக்குடன் இல்லாவிட்டாலும் கொஞ்ச நாளுக்கு ஒரு முறையாவது தொகுக்கப்படும். :-)

https://writer.zoho.com/public/rajasankar/குவாண்டம்-தியரியும்-இருக்கும்-துகள்களும்

இரண்டும் ஒரே தொகுப்புதான். தரவிறங்கும் வேகத்தை கணக்கில் கொண்டு இந்த ஏற்பாடு.

ராஜசங்கர்

Friday, August 13, 2010

(டார்வினின்) உயிர்தளிப்பு கொள்கை-6

டார்வினின் கொள்கைக்கு அடுத்த எதிர்வாதமாக வைப்பது இனப்பெருக்கம் மற்றும் ஆண்,பெண் விகிதங்களை தான். இதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

ஒரு தீவில் ஒரு இலை, தழைகளை சாப்பிட்டு உயிர் வாழும் விலங்கு வகை மட்டும் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவைகள் அங்குள்ள தாவர வகைகளை சாப்பிட்டு பல்கி பெருகும். ஆனா இப்படி தொடர்ந்து பெருக முடியாது இல்லையா? ஏன்னா அங்கிருக்கும் உணவுப்பொருட்கள் அளவு பெருகாது

இப்படி பெருகினதுக்கு அப்புறம் அந்த உணவுக்கு போட்டி வரும். இந்த போட்டியை தான் உயிரினங்கள் அதிக தகுதிகளை வளர்த்துக்க உதவுது.

இப்படி தகுதிகளை வளர்த்துக்கொண்ட உயிரினங்கள் அதிலிருந்து மேற்கொண்டு முன்னேறாட்டியும் இருக்கற தகுதிகளை தக்க வச்சுக்க முயலும். இங்கன தான் ஆண், பெண் விகிதங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன

விலங்குகளில் ஆண்கள் சண்டை போட்டு அதில் எது வெற்றி பெறுகிறதோ அவைகளுக்குதான் இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சரி பறவைகளுக்கு?

ஆண் மயிலுக்கு தோகை இருப்பது. சேவலுக்கு கொண்டை இருப்பது போன்றவைகள் எதுக்காம்?

இங்க முக்கியமான ஒன்றை பார்க்கவேண்டும். உயிரினங்களில் ஆரோக்கியமாக இருப்பவையே இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பை பெருகின்றன.

இங்க தான் ஆண் பெண் தொகைவிகிதமும்  இனப்பெருக்கத்திற்கான வாய்ப்பு சதவீதமும் வருகின்றன.

விலங்குகளில் இனப்பெருக்க விகிதமானது இயற்கையாவே சமன் செய்யப்படும். விலங்குன்னு சொன்னா மனிதர்களையும் சேர்த்துதான். எடுத்துக்காட்டா முதலைகளில் முட்டை இடும் இடத்தின் வெப்பத்தை பொறுத்து அது ஆணா பெண்ணா என தீர்மானிக்கபடும். எந்த எண்ணிக்கை குறையுதோ அப்போ வெப்பம் குறைவான அல்லது அதிகமான இடத்தை தேடி போகும்.

சரி இதுல என்ன எதிர்வாதம்?

மனிதர்களில் ஆண், பெண் விகிதம் சரியாக இல்லை. பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள் எனவே டார்வினின் கொள்கை தவறு என்பதுதான்.

குழந்தைகள் பிறப்பு விகிதம் ஏறக்குறைய சரியாகதான் இருக்கும். வேணுமின்னா புள்ளிவிவரங்களை எடுத்து பாருங்க. ஆனா வயதானவர்களில் பெண்கள் தான் அதிகமாக இருப்பார்கள். ஏன்?


ஆண்களில் உடம்பில் இருக்கும் ஹார்மோன் தான் காரணம். மேலும் பேரக்குழந்தைகளை வளர்க்க ஆண்கள் தேவைப்படுவதில்லை.

இப்படி இருக்கும் விதத்தை தங்களுக்கு வேண்டியபடி திரித்துக்கொண்டு டார்வின் கொளுகை தப்பு நீருபிக்கபடலை என சொல்லி திரிகிறார்கள்.

Monday, August 9, 2010

உயிர்தளிப்பு கொள்கை-5

டார்வினின் கொள்கைக்கு அடுத்த எதிர்ப்பாக இன்னும் என்னென்ன இருக்கிறது என பார்ப்போம்.

டார்வினின் கொள்கை உயிரிகள் மாற்றமடைகின்றன. புதிய தகுதிகளை வளர்த்துக்கொள்கின்றன என சொல்லிட்டு போயிட்டாலும் அதை அறிவியலார் எல்லாருமே அப்படி ஏத்துக்கல. டார்வின் சொன்னவுடனே எல்லாரும் ஆமாம் சாமி போடறதுக்கு அவுரு என்ன இந்தியாவுல ஏதேனும் கட்சி தலைவராவாக இருந்தார்?

டார்வின் காலத்துக்கப்புறம் உயிரியல் துறையில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டன. மரபணுக்கள், நுண்ணுயிரிகள் என புதிய துறைகளே வந்தன. இதில் ஒவ்வொரு துறையில் இருப்பவர்களும் டார்வின் சொன்னதை வச்சு ஆராய்ச்சி செஞ்சாங்க. அதாவது ஒவ்வொரும் டார்வின் கொள்கை உண்மையா இல்லையா என ஆராய்ந்தாங்க.

இதில் ஒவ்வொரு துறையை சேர்ந்தவரும் டார்வின் சொல்லும் மாற்றங்கள் எப்படி வரலாம் என கருத்துருக்களை உருவாக்கினார்கள். அப்படி உருவாக்கியவை மீண்டும் ஆராயப்பட்டு ஒத்துகொள்ளப்பட்டன. சரி அப்படி என்ன கருத்துருக்கள் வந்தன என பார்க்கலாம்

1. மரபணு மாற்றம்
2. சூழ்நிலைக்கு ஏற்ப மாறுதல்
3. இனப்பெருக்கம்
4. வேறு குழு வழியான இனப்பெருக்கம்
5. குழுக்கிடையில் இனப்பெருக்கம்
6. இணை உயிர் தளிப்பு

இப்படியாக நிறைய விளக்கங்கள் இருக்கு. இதிலும் துணை பிரிவுகளை சேர்த்தால் டார்வினின் கொள்கை இப்படி விரிந்து உள்ளதா எனத்தோன்றும்.

சரி இப்படி இருக்கறத ஏன் பார்க்கவேண்டும்? இப்படி பிரிவுகள் இருப்பதை கொண்டு டார்வின் கொள்கை ஒழுங்கற்றது, எல்லா அறிவியலாளர்களும் அதோடு ஒத்து போவதில்லை என சொல்லி  வருகிறார்கள். மேலும் இந்த விளக்கங்களை திரித்து சொல்லி டார்வினின் கொள்கை பொய் என நீருபிக்க முயல்கிறார்கள். உண்மையான விளக்கத்தை யாரும் படிக்க மாட்டாங்க என்ற நம்பிக்கைதான். :-)

மேலே சொன்ன விளக்கங்கள் அல்லது பிரிவுகள் எல்லாமே அடிப்படையில் ஒன்றை தான் சொல்லு. எப்படீன்னா நோய் வர கிருமிகள் தான் காரணம் என்றாலும் ஒரு சில நோய்கள் பாக்டீரியா மூலமும் ஒரு சில வைரஸ் மூலமும் வரலாம். இதில் பாக்டீரியாக்கள் ஒருவிதமாவும் வைரஸ்கள் வேறு விதமாகவும் செயல்படும். இதில் வைரஸ்கள் எப்படி செயல்படுகிறதோ அதை கொண்டு பாக்டீரியாக்கள் செயல்படுவதை தவறு என சொல்வதை போல.

நான் சிறு வயதில் படிக்கும் பொழுது ஒரு பாடம் உண்டு. இரண்டு பாத்திரங்கள் எடுத்துக்கொண்டு ஒன்றில் மாமிசத்தை மூடியும் இன்னொன்றில் மாமிசத்தை மூடாலும் வைத்தால் சில நாட்களில் மூடாமல் வைத்த பாத்திரத்தில் மட்டும் பூச்சிகள்,கிருமிகள்,புழுக்கள் இருக்கும். இது காற்றுப்புகாமல் வைத்தால் வெளியில் உள்ள ஏதும் உள்ளே வரமுடியாது. இதை வைத்துகொண்டு பாத்தீர்களா உயிரற்றதில் இருந்து உயிர் வரமுடியாது எனவே டார்வினின் கொள்கை பொய் என சொல்லும் ஆட்களும் உண்டு. இதுக்கு என்ன சொல்றதுன்னு நீங்களே சொல்லுங்க.

மேற்கொண்டு, இந்த மாதிரி ஒரு வாதத்தையும் பார்ப்போம்.

மரத்திற்கு மரம் தாவிய குரங்கு இனம் கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தது. இதில் வால் சுருங்கியது. கை விரல்களும் கால் விரல்களும் ஒன்று போலிருந்தது பின்பு கால்விரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போதிருக்கும் நிலைக்கு வந்தன. இதில் இந்த கொஞ்சம் கொஞ்சம் சொன்னா அது எப்படி எந்த வேகத்தில் நடந்தது. வருசத்துக்கு கால் மில்லி மீட்டர் என நடந்ததா அல்லது வருசத்துக்கு கால் செண்டி மீட்டர் என நடந்திருக்குமா?

இதுக்கு ஒரு அறிஞர் தொல்லியல் படிமங்களை அலசி ஆராய்ந்துட்டு உயிர் தளிப்பு படுவேகமாக தான் நடந்திருக்கலாம். ஏன்னா படிமங்களில் இடைப்பட்ட உயிரிகள் அதிகமாக இல்லை அப்படீன்னார். அதாவது 80 லட்சம் வருடங்களில் நடப்பது 80 ஆயிரம் வருடங்களில் நடந்தால் அது படிமங்களில் சிக்குவது கடினம்.

மேற்சொன்னத டார்வின் கொள்கைக்கு எதிராக வைக்கும் ஆள்கள், ஐ இங்க பாத்தியா படிச்ச ஆளே சொல்லிட்டார் உயிர்கள் இப்போது இருப்பது போல் அப்படியே தான் வந்துச்சு அதுனால டார்வின் கொள்கை பொய் என பிரச்சாரம் பண்ணிட்டு இருக்காங்க.

இன்னும் இருக்கும் ஓவ்வொன்னா வரும்.