இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Thursday, September 8, 2011

குவாண்டம் கொள்கையும் இருக்கும் துகள்களும்-42

ஐன்ஸ்டைன் வெளியிட்ட சார்பியல் கொள்கைகள் இரண்டு. ஒன்று சிறப்பு சார்பியல் இன்னொன்று பொது சார்பியல். சிறப்பு சார்பியல் கொள்கை மேக்ஸ்வெல்லின் மின்காந்த சமன்பாடுகளையும் இயங்கியலையும் இணைக்கின்றது என முன் பதிவில் பார்த்தோம். இதிலே பொது சார்பியல் கொள்கை.

பொது சார்பியல் கொள்கை புவிஈர்ப்பு விசை பற்றியது. அதுக்குதான் நீயூட்டனின் விதிகள் இருக்கேன்னு கேக்குறது கேக்குது.

நீயூட்டனின் விதிகள் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டாலும் அவற்றால் பல கோள்களின் இயங்கு நிலையை கணக்கிட முடியவில்லை. கூடவே இந்த புவி ஈர்ப்பு என்பது நீயூட்டன் காலத்தில் இருந்து இன்று வரை தண்ணிகாட்டிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம். மின்காந்த விசைகளை மாத்துறது எப்படீன்னு தெரிஞ்சுது. அது இப்போ நீங்க இத படிக்கற கணினி வரைக்கும் உபயோகம் ஆகுது. ஆனா அந்த மாதிரி புவி ஈர்ப்ப செய்யமுடியல. செய்ய முடிஞ்சா ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஆயிரம் கிமி தரும் கார் தயாரிக்கலாம். ஸ்டார் வார்ஸ் படத்துல வர்றமாதிரி பறந்து பறந்து போலாம்.

முன்பதிவுகளில் எடை ஏன் வருதுன்னு பார்த்தோம். எடைக்கு ஈர்ப்பு விசை வர்றது அடுத்த பிர்ச்சினை. கூடவே பெரிய எடைக்கு அதிக ஈர்ப்பு விசை வருதல் வேற சிக்கல். இது இதோட நிக்கல, அணுக்களில் எப்படி இந்த எடை இருக்கு? அதற்கு எப்படி ஈர்ப்பு சக்தி இருக்கு? பெரு வெடிப்பு கொள்கை உண்மை என்றால் எப்போ இதெல்லாம் சேர ஆரம்பித்தது? ஒளியை இது ஈர்க்குமா? என இந்த புவி ஈர்ப்பு விசை தரும் மண்டைக்குடைச்சல் ஏராளம். அந்த குடைச்சல் பத்தாதுன்னு ஐன்ஸ்டைன் தன்னுடைய விளக்கம் மூலமா இன்னோன்ன கொண்டு வந்தார்.

அது இடம் மற்றும் நேரம். இடம்ன்னா வெற்றிடம் அல்லது பெருவெளின்னு சொல்லலாம். பொருட்களின் எடையால் இந்த வெற்றிடமும் நேரமும் சுருக்கப்படுகின்றன. அதையே நாம் ஈர்ப்பு விசை என சொல்கிறோம். எப்படி சுருக்கப்படுகின்றன என்றால் ஒரு போர்வையை நான்கு புறமும் பிடித்துக்கொள்ளுங்கள். நடுவிலே எடை அதிகமான இரும்புக்குண்டை போடுங்கள். அது நடுவிலே நின்று போர்வையை இழுக்கும் அல்லவா அது போல் இந்த விளைவு இருக்கும்.

இன்னோர் விதமா சொன்னா ஈர்ப்பு விசை என இருப்பது நேரஇடம் வளைவதால் ஏற்படும் விளைவு. இந்த வளைவினால் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்படுகின்றன. இந்த வளைவு ஓர் அலை போல பரவும். அதற்கு பெயர் ஈர்ப்பு அலைகள். குளத்தில் கல் எறிந்தால் அலை அலையாக நீரின் மேற்பரப்பு தெரிவது போல் இந்த அலை பரவும்.

சிறப்பு சார்பியலில் ஒளியின் வேகத்திற்கு போகும் போது நேரம் குறையும் என பார்த்தோம். அதே போல் பொது சார்பியலின் படி ஈர்ப்பு விசை அதிகமாக அதிகமாக நேரம் செல்வது குறையும்.

இந்த இரண்டும் சேர்ந்தா என்னாகும்? பின்னாடி பார்ப்போம்.

அடுத்து ஒளி. ஈர்ப்பு விசை ஒளியையும் வளைக்கும். அதாவது ஈர்ப்பு விசை அதிகமாக இருந்தால் ஒளி வளைந்து போகும். நேர்க்கோட்டில் போகாது. அதிக தொலைவில் இருந்து வரும் ஒளி, அங்கிருக்கும் நட்சத்திரங்களால் வளைக்கப்பட்டு வரும். ஒரே ஒரு நட்சத்திரத்திற்கு நமக்கு நான்கு நட்சத்திரமாக தெரியும். இதுக்கு பேரு ஈர்ப்புக்கண்ணாடி விளைவு. கிராவிட்டேஷனல் லென்ஸ் அப்படீன்னா ஈர்ப்புக்கண்ணாடி என மொழிபெயர்த்திருக்கேன்.

சூரிய கிரணம் அப்போ இந்த விளைவு எளிதாக பரிசோதனை செய்ய முடியும். முதன் முதலில் இதை ஓரு சூரிய கிரகணம் அப்போதான் செய்து சரி பார்த்தார்கள். ஐன்ஸ்டைனின் அனைத்து கொள்கைளும் இதே போல் சரிபார்க்க பட்டுள்ளன. எப்படி சரி பார்த்தார்கள் என தெரிஞ்சுக்க விருப்பம் உள்ளவர்கள் சொல்லுங்க. தனிப்பதிவாக போட்டுடலாம். 

நாம பாக்குறது குவாண்டம் கொள்கை தான? அதோட இது ஒத்துப்போகுதான்னா? இல்லை. குவாண்டம் கொள்கையும் சார்பியல் கொள்கையும் ஒத்துப்போகல. அணுக்கள், துகள்கள் அளவில் நடக்கும் விளைவுகளை விளக்க முடியல. ஐன்ஸ்டைன் தன்னுடைய கடைசி வருடங்களை இந்த இரண்டையும் இணைக்க முயற்சி செய்தார். இணைத்து ஒரு சேர்ந்த இட கொள்கையை கொண்டு வர ரொம்ப முயன்றார். ஆனா அது முடியல. அதுக்கு பல காரணம். ரொம்ப முக்கியமான ஒன்னு, குறை விசை-வலுவிசையை இதுக்குள்ள அவரு சேர்க்கல. ஏன்னா அதை அவர் இறந்து பல வருடங்களுக்கு பின்பு தான் விளக்கினாங்க.

குவாண்டம் கொள்கையில் புவிஈர்ப்புவிசையை இணைக்க கிராவிட்டான் எனும் துகளை கற்பனை செஞ்சாங்க. ஒளிக்கு போட்டான் எனும் துகள் இருப்பது போல் இதுக்கு கிராவிட்டான் இருந்தா அதை வைச்சு இதை விளக்கமுடியுமான்னு பார்த்தா கிராவிட்டான இன்னும் பார்க்க முடியல. அதை பின்னாடி பார்க்கலாம்.

அடிப்படை விசைகளில் மூன்றை பார்த்தாயிற்று. அடுத்து குறை விசை- வலு விசையை பார்க்கலாம்.

5 comments:

சார்வாகன் said...

அருமையான் விள்க்கம் நண்பரே தொடருங்கள்!!!!!!!
/எப்படி சரி பார்த்தார்கள் என தெரிஞ்சுக்க விருப்பம் உள்ளவர்கள் சொல்லுங்க. தனிப்பதிவாக போட்டுடலாம். /
தனிபதிவாக இட விருப்பம் தெரிவிக்கிறேன்.இட்டால் நன்றாக் இருக்கும்.
நன்றி

DrPKandaswamyPhD said...

ரொம்ப சிரமப் பட்டு எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள். ஆனால் எத்தனை பேர் புரிந்து கொள்வார்கள்?

rajasankar said...

அன்பின் கந்தசாமி,

பாராட்டுக்களுக்கு நன்றி. அறிவியலை தமிழில் தர யாரும் இல்லை என சொல்வதை விட ஒரு முயற்சி செய்தால் என்ன எனவே ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் படிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கொஞ்ச வருடங்களில் தாய் மொழியிலேயே நம்மக்கள் எல்லாவற்றை படித்தால் மகிழ்வாக இருக்கும்.

rajasankar said...

அன்பின் சார்வாகன்,

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. அடுத்த பதிவுகளில் கண்டிப்பாக இது இடம் பெறும்.

Powerthazan said...

நல்ல இருக்கு ஆனால் பேச்சு தமிழை விடுங்க. இலக்கணத்தை பயன்படுத்துங்க. உங்கள் கட்டுரைகள் இந்தியாவை விட்டு வெளியில் போகும் போது என்னை போன்றவர்கலால் புரிந்து கொள்ள முடியாது அல்லவா?

Post a Comment