இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Sunday, November 27, 2011

குவாண்டம் கொள்கையும் இருக்கும் துகள்களும் - 46

இந்த பதிவில் சமீபத்தில் நடந்த பரிசோதனையான நீயூட்ரினோக்கள் ஒளியை விட வேகமாக போகின்றன என்பதான செய்தியை பற்றி பார்ப்போம். முன் பதிவு ஒன்றில் மிகச்சுருக்கமாக பார்த்தோம். இதில் விரிவாக பார்க்கலாம்.

நீயூட்ரினோக்கள் என்பவை மின் ஏற்றம் ஏதுமில்லாத அடிப்படை துகள். இதற்கு மிகச்சிறிய அளவிலான எடை இருக்கிறது என கணிக்கப்படுகிறது. இந்த நீயூட்ரினோக்கள் எடையை கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. இதன் எடை எலெக்ட்ரான் வோல்ட் எனப்படும் ஓர் சக்தி அளவில் அளக்கப்படுகிறது. இது மின் ஏற்றம் இல்லாததாலும் அடிப்படை துகளாக இருப்பதால் புவியீர்ப்புவிசையால் பாதிக்கபடாததாலும் வெகு தொலைவிற்கு பயணம் செய்யும். அதுவும் பொருள்களுக்குள் புகுந்து பயணம் செய்தாலும் ஏதும் பாதிக்கபடாது.

நாம் பார்க்கும் பரிசோதனை ஆனது, ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நீயூட்ரினோக்களை செலுத்தி சேரும் இடத்தில் எப்படி வந்து சேர்கிறது, என்ன பாதிப்புகள் இருந்தன என பார்க்கும் பரிசோதனை. இந்த இரண்டு இடங்களுக்கும் இடையில் இருக்கும் தூரம் 450 மைல்கள்/725 கிலோமீட்டர்கள். அந்த இரண்டு இடங்கள் சிஇஆர்என், ஜெனீவா, சுவிட்சர்லாந்து மற்றும் கிரேன் சேசோ இத்தாலி.

இந்த பரிசோதனை எப்படி செய்யப்பட்டது?

சிஇஆர்என் இல் இருந்து ஒரு நீயூட்ரினோ துகள்கற்றையானது இத்தாலியில் இருக்கும் டிடெக்டர்களை நோக்கி வீசப்படும். இந்த துகள் கற்றையானது காற்று, நீர், நிலம் போன்றவற்றைகளில் ஊடுருவி இத்தாலியில் இருக்கும் டிடெக்டர்களை வந்தடையும். வீசப்படும் இடத்தில் எந்த மாதிரியான கற்றைகள், எவ்வளவு துகள்சக்தியுடன் எவ்வளவு துகள்களை வீசுகிறோம் என கணக்கிட்டு வைத்திருப்பார்கள். அதே போல் இத்தாலியில் வருகிறதா என பார்ப்பார்கள். இதை ஒரு நாள் ஒரு தடவை அல்ல, வருடக்கணக்கில் செய்து பார்ப்பார்கள். ஏனென்றால் 2.4/1000 நொடியில் இது நடந்துவிடும். அதாவது ஒரு நொடியின் ஆயிரத்து ஒர் பங்கை 2.4 ஆல் பெருக்கும் நேரம் தான் இந்த பரிசோதனைக்கான நேரம்.

இதிலே பிரச்சினை இந்த ஒளிக்கற்றைகள் 64 நேனோ நொடிகளுக்கு முன்பாகவே வந்துவிட்டன என்பது தான். இது ஒளியின் வேகத்தில் வந்திருந்தால் எடுக்கும் நேரத்தை காட்டிலும் 64 நேனோ நொடிகள் அதிகம். நேனோன்னா டாட்டா நேனோவோ ஐபேட் நோனோவோ இல்லை. நேனோ என்பது 1/1,00,00,00,000 (ஒன்றின் கீழ் நூறு கோடி)ஆகும்.  http://en.wikipedia.org/wiki/Nano-

இதை சொன்னவுடன் பெரிய சலம்பல் கிளம்பியது. அப்படி இருக்க முடியாது என சொன்னார்கள். திரும்பவும் இந்த சோதனையை செய்தார்கள். அதிலும் இதே முடிவு தான் வந்தது. இந்த முடிவுக்கு பல சந்தேகங்கள் எழும்பினாலும் இப்போது ஒரு முக்கிய சந்தேகத்தை வைத்துள்ளார்கள்.

அது நிறை-சக்தி சமன்பாடு. இதை E=mc2  அப்படீன்னு சொன்னா நிறைய பேருக்கு டக்குன்னு புரியும். இதிலே மிகமுக்கியான அம்சம் ஏன் ஒளியை விட எந்த ஒரு நிறை கொண்ட பொருள்/துகளும் போகமுடியாது என்பது தான். ஒரு பொருள் வேகமாக போக போக அதன் எடை அதிகரிக்கும். எடை அதிகரிக்க அதிகரிக்க அதன் ஆற்றல் குறையும். ஆற்றல் குறையும் போது தானாக வேகம் குறைந்துவிடும்.

இது தான் அந்த நீயூட்ரினோக்களில் பிரச்சினை. சிஇஆர்என் இல் வீசப்பட்ட நீயூட்ரினோக்கள் இத்தாலியை அடையும் போதும் அதே ஆற்றலோடு இருந்தன. ஆனால் ஒளியின் வேகத்தை விட வேகமாக போயிருந்தால் அதே ஆற்றலோடு இருந்திருக்கமுடியாது என்பது வாதம்.

ஆனால் .... (இந்த ஆனால் போட்டாலே ஏதோ விவகாரம் என அர்த்தம்). ஆனால் இது ஐன்ஸ்டனைனுடை சமன்பாடு உண்மை என எடுத்துக்கொள்ளும் பட்சத்திலே. ஐன்ஸ்டைனுடைய சமன்பாடு பல முறை நீருபிக்கப்பட்டிருக்கிறது ஆனாலும் இது ஏன் அதை பொய்யாக்கூடாது என்பதற்காக கேள்விக்கு விடை இல்லை. ஏனென்றால் இது பலமுறை முன்பு நடந்திருக்கிறது. அணுவை பிளக்கமுடியாது, அணுவுக்கு உள்ளே கரு இருக்க முடியாது, அணுவை எலெக்ட்ரான்கள் சுற்ற முடியாது என நூற்றாண்டுகளுக்கு முன்பு சொன்னதில் இருந்து இப்போது குவாண்டம் எண்டாங்ல்மெண்ட் எனப்படும் இரண்டு துகள் எவ்வளவு தூரம் பிரிந்திருந்தாலும் ஒரே நிலையில் இருப்பது வரை முன்பு பலதும் முடியாது என கருதப்பட்டது இப்போது முடிந்திருக்கிறது.

இதிலே பல விஞ்ஞான கற்பனைக்கதைகள் எழுதிய ஆர்தர் சி கிளார்க் சொல்லியதையும் பார்க்கவேண்டும்.

ஒரு மதிப்புமிக்க மூத்த விஞ்ஞானி ஒன்றை செய்யமுடியும் என்று சொல்வார் எனில் அவர் சரியாக சொல்கிறார். ஆனால் ஒன்று செய்யவே முடியாதது என்று சொல்லும் போது அவர் மிக தவறாக சொல்கிறார்.
http://en.wikipedia.org/wiki/Clarke%27s_three_laws

இப்போது இந்த பரிசோதனை தவறு என சொல்லும் விஞ்ஞானிகளுக்கு இந்த சொற்றொடர் தான் சொல்லப்படுகிறது.

இந்த பரிசோதனையை ஜப்பானிலும் அமெரிக்காவிலும் இருக்கும் பரிசோதனை மையங்கள் செய்து பார்க்கபோவதாக சொல்லியிருக்கின்றன. அதன் பின்பு ஓர் முடிவு தெரியவரும். இந்தியாவில் செய்ய யாருமில்லையா என கேட்கவேண்டாம். இங்கே தேனிக்கு பக்கத்தில் இந்த பரிசோதனை கூடம் கட்ட முடிவு செய்திருக்கிறார்கள். http://en.wikipedia.org/wiki/India-based_Neutrino_Observatory. கூடங்குளம் போல் இதையும் மூட முடிவு எடுக்கவில்லை என்றால் இன்னும் 4 வருடங்களுக்கு பிறகு இதை இங்கேயும் செய்யலாம்.